குலசேகர ஆழ்வார் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பராபவ ஆண்டு மாசித் திங்கள், புனர்பூச நட்சத்திரத்தில் சேரநாட்டு அரசராகிய திருவிரதனுக்கும், அரசி நாதநாயகிக்கும் திருமாலின் திருமார்பில் இருக்கும் கௌஸ்துபம் என்னும் மணியின் அம்சமாக கேரளத்தில் உள்ள திருவஞ்சிக்களம் என்னும் தலத்தில் அவதரித்தார்.
குலசேகரர் இளமையில் வேதநூல்கள், சாத்திரங்கள், நீதி நூல்கள் முதலியவற்றைக் கற்றதோடு படைப்பயிற்சியும் பெற்று, மன்னராய் இருந்தும் சமய வாழ்வில் பற்றுக் கொண்டார். திருமாலிடம் பக்தி கொண்டு தன் நாட்டு மக்களையும் அதில் ஈடுபடுத்தினார். குலசேகரர் இராமாயணக் கதாகாலட்சேபங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை இராமாயணக் கதாகாலட்சேபம் நடந்து கொண்டிருந்தபோது, பாகவதர் ஆரண்ய காண்டத்தில் இராமனுக்கும், அங்கு போர்புரிய வந்திருந்த அரக்கர்களுக்கும் போர் மூண்டு தன்னந்தனியே இராமபிரான் போரைச் சமாளிக்க வேண்டிய பகுதியை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது குலசேகர ஆழ்வார் உணர்ச்சி வசப்பட்டவராய், இராமனுக்குப் போரில் உதவ தன் சேனைகளுக்கு கட்டளையிட்டார். இதைக் கேட்டு திகைத்த பாகவதர், இராமன் தனியே போரிட்டு அரக்கரை வென்றதைக் கூறி குலசேகரரை சாந்தப்படுத்த, அவரும் தன் படைகளை திரும்ப அழைத்தார்.
திருவரங்கப் பெருமான் மீது பக்திக் கொண்டு அரங்கனுக்கு அரணாக மூன்றாம் சுற்று மதில் சுவரை கட்டினார். தற்போதும் இது குலசேகரன் வீதி என்று அழைக்கப்படுகிறது. தம் மகனுக்கு பட்டம் சூட்டி துறவறம் பூண்டு திருவேங்கடம் சென்று பெருமாளுக்குத் தொண்டு செய்தார். தமது பெருமாள் திருமொழியில் "வேங்கடவா! உன் கோயிற்படியாக இருக்க விரும்புகிறேன்" என்று பாடியதால் பெருமாள் கருவறையிலுள்ள நுழைவாயிற்படி இன்றும் "குலசேகரன் படி" என்று அழைக்கப்படுகிறது.
திருமாலிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு "பெருமாள் திருமொழி" என்ற 105 பாசுரங்களைக் கொண்ட தமிழ்ப்பாடல்களையும், "முகுந்த மாலை" என்ற 40 பாடல்களைக் கொண்ட வடமொழிப்பாடல்களையும் அருளினார்.
|